தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் இருந்து 20-பேர் கொண்ட குழு பொங்கல் விடுமுறைக்காக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் மதுரை திரும்பும்போது தாராபுரம் - ஒட்டன்சத்திரம் சாலையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்தவுடன் எச்சரிக்கை பலகை இருப்பதை அறியாமல் குளிப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு 20 பேர் கொண்ட குழு அமராவதி ஆற்றில் இறங்கி குளிக்க சென்றனர்.
அப்போது 10-ம் வகுப்பு மாணவன் ஹரி (15) முதலில் குளிக்க அமராவதி ஆற்றில் இறங்கியுள்ளார். அப்போது ஹரியின் கால் பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது உறவினர் சின்னகருப்பு (31) சிறுவனை காப்பாற்ற இறங்கியுள்ளார். அவரும் மாட்டிக்கொண்டதால் அவரை மீட்க பாக்கியராஜ் (39) என்பவர் இறங்கியுள்ளார். மூவரின் கால்களும் பாறை இடுக்கில் சிக்கி கொண்டு தண்ணீரில் தத்தளித்தனர். உடனடியாக உறவினர்கள் அவசர உதவி எண் 100க்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர்.
உடனடியாக தாராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே மூவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment