தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சாலை பணிகளை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர். வழியில் உப்பாறு அணை அருகே உள்ள தேர்ப்பாதையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100 பேர் திடீரென அமைச்சர் கயல்விழிசெல்வராஜின் காரை முற்றுகையிட்டனர்.
அப்பகுதி பொதுமக்கள் தேர்ப்பாதையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தினர். பின்னர் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அமைச்சர்களுடன் வந்திருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
மறியல் காரணமாக தாராபுரம் பூளவாடி மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment