ஆற்றல் அறக்கட்டளை சார்பில் 9 கிராம மக்களுக்கு மின்சாரம், குடிநீர் வசதி - அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி சாலையில் உள்ள மடத்துப்பாளையம் பகுதியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் தொப்பம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் பெற தண்ணீர் பம்பிங் நிலையம், 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து தடையில்லா மின்சாரம்- குடிநீர் வினியோகம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆற்றல் அறக்கட்டளை அசோக்குமார் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர்.ஆற்றல் அசோக்குமார் குடிநீர் செல்லும் இணைப்பினை தொடங்கி வைத்து பேசியதாவது:-மக்களுக்கு அடிப்படை தேவை குடிநீர். இந்த பகுதியில் அமராவதி ஆற்றுப்பாசனம் இருந்தும் மும்முனை மின்சாரம் பழுதால் குடிநீர் கிடைக்காமல் சுமார் 9 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவிப்பதாக ஊர் தலைவர்கள் மூலமாகவும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மூலமாகவும் அறிந்தோம் . உடனடியாக மக்களின் முக்கிய தேவையாக உள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுமார் ரூ.3.50 லட்சம் செலவில் மின் இணைப்பு கருவிகள், உதிரி பாகங்கள் அனைத்தையும் வழங்கி மின்சார பணிகளை முடித்துவிட்டு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தொப்பம்பட்டி ஊராட்சி பெரிய குமார பாளையம், பெட்டிக்காம்பாளையம், வேலாயுதம்பாளையம், மருதூர் , மோனார்பட்டி உள்ளிட்ட 9கிராம பஞ்சாயத்து மக்களின் குடிநீர் தேவையை ஆற்றல் அறக்கட்டளை பூர்த்தி செய்வதில் மகிழ்கிறோம். ஆற்றல் அறக்கட்டளை சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் முக்கிய தேவைகளான குடிநீர், உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. அறக்கட்டளை மூலம் திருக்கோவில்கள் புனரமைப்பு, அரசு பள்ளிகள் மேம்பாடு, சமுதாயக்கூடங்கள் கட்டித் தருதல் போன்ற பணிகளை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மட்டுமின்றி, மொடக்குறிச்சி, காங்கேயம் ,வெள்ளகோவில், முத்தூர், குண்டடம் மற்றும் ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் சிறப்பாக செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக கிடைக்க தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை பெரும் உதவியாக இருக்கும். இந்த உதவியை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த ஆற்றல் அசோக்குமாருக்கும் அவரது குழுவினர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி தலைவர்கள் லட்சுமி சரண்யா ,சேகர் ,மகேந்திரன், பி. கே. ராஜ், தேவி ,ரத்தின சாமி, முத்து பிரியா மற்றும் ஊர் தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment