தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள ஆத்திக்காடுபுதூரில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் அருந்ததியர் சமூக மக்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
60 ஆண்டு கால கோரிக்கை:
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:
தாராபுரம் வட்டம், நந்தவனம்பாளையம் கிராமம், ஆத்திக்காடுபுதூரில் உள்ள க.ச.எண்.750/3A என்ற நிலப்பரப்பில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக 40-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகக் குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் முறையாக வீட்டுவரி மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர்.
பூமிதான நில விவகாரம்:
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, பூமிதான இயக்கத்தின் மூலம் இந்த நிலமானது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு தனி நபருக்கு பட்டா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த 60 ஆண்டுகளாக இந்த இடத்தில் வசித்து, பட்டா கேட்டுப் போராடி வரும் தங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, தனி நபர் பெயரில் உள்ள அந்தப் பட்டாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போது 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வரும் 40 அருந்ததியர் குடும்பங்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று தலைமுறைகளாகப் போராடியும் தங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை எனப் போராட்டக் களத்தில் பொதுமக்கள் கண்ணீர் மல்கத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இப்போராட்டத்தால் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சில மணி நேரம் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment