திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் துரை ராமசாமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் முத்தூர் - ஈரோடு சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு இவரது கடைக்கு ஈரோடு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி 2 பேர் கழுத்தில் அடையாள அட்டையை மாட்டி கொண்டு நேரில் வந்து மணிகண்டனிடம் கடையின் ஜி.எஸ்.டி. கணக்குகளை பெற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த நபர்கள் 2 பேரும் மணிகண்டனிடம் போக்குவரத்து செலவுக்கு ரூ.700 கொடுக்குமாறு வாங்கி கொண்டு சென்று விட்டனர். இதனை தொடர்ந்து கடைக்கு ஆய்வு வந்த 2 நபர்களும் வணிக வரித்துறை அதிகாரிகளா? என மணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மணிகண்டன் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகாரர்கள் பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த 2 நபர்களை துரத்தி சென்று கையும் களவுமாக பிடித்து முத்தூர் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 நபர்களையும் விசாரணை செய்ததில் ஒருவர் ஈரோடு, வளையக்கார வீதியை சேர்ந்த தங்கவேல் (62) என்பதும், இவர் ஈரோடு வணிக வரித்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து கடந்த 2021-ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றவர் என்பதும், மற்றொருவர் ஈரோடு அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (49) என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவர் மீதும் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஈரோடு வணிக வரித்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்பும் அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்த சென்ற சம்பவம் முத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி.
No comments:
Post a Comment