மூதாட்டியிடம் 13 பவுன் நகை பறிப்பு; போலீசார் விசாரணை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 May 2023

மூதாட்டியிடம் 13 பவுன் நகை பறிப்பு; போலீசார் விசாரணை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மூதாட்டியிடம் 13 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தாராபுரம் கொட்டாப்புளி பாளையம் ரோடு டாக்டர் நகரைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. விவசாயி. இவருடைய மனைவி திருமாத்தாள் (வயது 65). இவர் நேற்றுமுன்தினம் மாலை கடைவீதிக்கு வந்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரை பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

மூதாட்டியின் அருகே அந்த ஆசாமிகள் வழி கேட்டனர். இதையடுத்து மூதாட்டி வழியை சொல்லிக்கொண்டிருக்கும்போதே மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ஆசாமி திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பிடித்து இழுத்தார். அப்போதுதான் அவர்கள் வழி கேட்கவில்லை என்றும் வழிகேட்பது போல் நடித்து நகையை பறிக்க வந்த ஆசாமிகள் என்று தெரிந்து கொண்டு மூதாட்டி கூச்சல் போட்டார். ஆனால் அப்போது அந்த வழியாக யாரும் வராததால் அந்த ஆசாமிகள் மூதாட்டி அணிந்து இருந்த தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி உள்ளிட்ட 13 பவுன் நகைகளை பறித்து கொண்டு மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.



இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிறகு அனைத்து சோதனைச்சாவடி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர். 


அப்போது மர்ம ஆசாமிகள் 2 பேர் மூதாட்டியிடம் நகைகளை பறித்து விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதையடுத்து வீடியோ பதிவுகளை வைத்து அந்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad