இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டுகள், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் அலங்கியம், கொங்கூர், மணக்கடவு, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தாராபுரம் அருகே அலங்கியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் அலங்கியம் போலீசார் காங்கயம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (வயது 42) என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த ஊறல் கைப்பற்றப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது. மேலும் அவரிடம் வேறு ஏதாவது இடத்தில் ஊறல் பதுக்கி வைத்துள்ளாரா என்ற விசாரணை நடத்தப்பட்டதில் அவரது வீட்டில் 2 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தொழிலாளி மணிகண்டனிடம் இருந்து 2 லிட்டர் சாராயம் மற்றும் 10 லிட்டர் ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment