தாராபுரம் அருகே மருத்துவ பட்டம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண்ணை அலங்கியம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தாசன் நாயக்கம்பட்டியில் 50 வயது பெண் ஒருவர் அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அப்பகுதியில் டாக்டர் என கூறி கடந்த 6 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.
இதில் சந்தேகமடைந்த சிலர் அந்த பெண் மீது திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்களை அனுப்பினர்.இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி தலைமையில் டாக்டர் அருண் பாபு, கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் மற்றும் சுகாதார துறையினர் தாசநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த 26-ந் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருத்துவம் பார்த்து வந்த பெண் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தனலட்சுமி (வயது50) என்பது தெரிய வந்தது.ஆய்வுக்கு வந்த சுகாதார அதிகாரிகள் தனலட்சுமி தங்கியிருந்த அறை கதவில் நேரில் ஆஜராக நோட்டீஸ் ஒட்டி அறையை 'சீல்' வைத்து சென்றனர். இதனை தொடர்ந்து தனலட்சுமி கடந்த 1-ந் தேதி கல்வி சான்றிதழ்களுடன் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் நேரில் விசாரணைக்கு ஆஜராகி சான்றிதழ்களை வழங்கிய பின் அதனை சரிபார்த்த போது அவர் பரிசோதனை நிபுணருக்கு (லேப் டெக்னீசியன்) படித்த விவரம் தெரிந்தது.
தனலட்சுமியிடம் நடந்த விசாரணை குறித்து இணை இயக்குனர் கனகராணி, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதனை ஆய்வு செய்த கலெக்டர் கிறிஸ்துராஜ், மருத்துவ இணை இயக்குனர் கனகராணி அலங்கியம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து ஒட்டன் சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த தனலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment