திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரில், அமராவதி சிலை பகுதி, சோளக்கடை வீதி மற்றும் ஐந்துமுக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 4 டாஸ்மாக் கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்தினரால் மூடப்பட்டன.
முன்னதாக, இந்த கடைகளை அகற்ற கோரி தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நகர தலைவர் ஜாபர் சாதிக் கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், இந்த நடவடிக்கைக்காக தமிழக முதலமைச்சருக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை அடையாளம் கண்டு அதிகாரிகளிடம் எடுத்துரைத்த முன்னாள் நகர தலைவர் ஜாபர் சாதிக்கிற்கும் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:
Post a Comment