குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பாம்புகள் சுற்றித்திரிவு; நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 May 2026

குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பாம்புகள் சுற்றித்திரிவு; நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை


வேப்பமரத்தை சுற்றியும் பாம்புகள் நடமாட்டம் – அக்கம் பக்க வீட்டு மக்களும் அச்சம்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு 7-வது வார்டில் செயல்பட்டு வரும் பால்வாடி பள்ளிக்குள் தினமும் பாம்புகள் புகுந்து வருவதாக பெற்றோர்களும், அப்பகுதி பொதுமக்களும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.


தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் சுற்றுப்புறங்களில் புதர்கள் அதிகமாக வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் அருகே அடிக்கடி பாம்புகள் சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிறு குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். விரைவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். பள்ளி திறக்கப்பட்ட பிறகும் இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


மேலும், பள்ளியை சுற்றியுள்ள புதர்கள் அகற்றப்படாததும், நீண்ட நாட்களாக சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறாததும் பாம்புகள் அதிகமாக வருவதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதனுடன்,பள்ளி வளாகத்தில் உள்ள பெரிய வேப்பமரத்தின் கிளைகள் பரந்து விரிந்துள்ளதால், அந்த மரத்தை சுற்றியும் பாம்புகள் அடிக்கடி வலம் வருவதாக கூறப்படுகிறது. மேலும், அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்குள்ளும் பாம்புகள் புகுந்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளி வளாகத்தை ஆய்வு செய்து, புதர்களை அகற்றுதல், வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்தல், வேப்பமர கிளைகளை வெட்டி சீரமைத்தல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad