திருப்பூரில் தவெக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு – ஜூன் 20-க்குள் நொய்யல் பாலம் பயன்பாட்டிற்கு வரும்: பாலமுருகன் எம்.எல்.ஏ. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 May 2026

திருப்பூரில் தவெக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு – ஜூன் 20-க்குள் நொய்யல் பாலம் பயன்பாட்டிற்கு வரும்: பாலமுருகன் எம்.எல்.ஏ.


திருப்பூர், மே 27:


திருப்பூர் பார்க் ரோட்டில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த அலுவலகத்தை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலமுருகன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாலமுருகன் எம்.எல்.ஏ.வுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலமுருகன் எம்.எல்.ஏ., “தெற்கு தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக பெறும் வகையில் இந்த அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் இருப்பேன். நான் இல்லாத நேரங்களில் உதவியாளரிடம் மனுக்கள் வழங்கலாம். அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


மேலும், “தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து தொடர்ந்து பணியாற்றுவேன். ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளேன். வரும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் அங்குள்ள அனைத்து பணிகளும் நிறைவடைந்து நொய்யல் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,” என தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, “திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள குறைகளை கேட்டறிந்துள்ளேன். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசி தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் எஸ்.பி. மணி, கவுன்சிலர் நாகராஜ், குத்துபுதின், ஜெ.கே. சாமி உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad